search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி பேராசிரியை பலி"

    நாகர்கோவிலில் பன்றி காய்ச்சலுக்கு கல்லூரி பேராசிரியை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Swineflu

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தற்போது கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பன்றி காய்ச்சலும் பரவி வருகிறது.

    இதைதொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே மாவட்டம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். அதன்படி சுகாதாரத்துறை ஊழியர்கள் காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நாகர்கோவில் சற்குணவீதி பகுதியை சேர்ந்த திரேசா (வயது 60) என்ற ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை காய்ச்சல் காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது ரத்த மாதிரியை பரிசோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க திறக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை வார்டில் திரேசாவை அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திரேசாவுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமானதால் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை திரேசா இறந்துவிட்டார். அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்புடன் வேறு சில உடல் நலக்குறைவுகளும் இருந்ததால் அவர் சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில் பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 2 பெண்கள், ஒரு வயது பெண் குழந்தை ஆகிய 3 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    அதேப்போல நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஒரு ஆணும், ஒரு பெண்ணும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களது உடல்நலம் தேரி வருவதாகவும், அவர்கள் இன்று அல்லது நாளை வீடு திரும்புவார்கள் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

    பன்றி காய்ச்சலுக்கு ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியை பலியானதை தொடர்ந்து பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பேராசிரியை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரை 2 பெண்கள் கவனித்து வந்தனர். அவர்களுக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதைதொடர்ந்து அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு நெல்லையில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    இதுபற்றி சுகாதாரத்துறை துணை இயக்குனர் மதுசூதனன் கூறியதாவது:-

    பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த நோய் தடுப்பு மாத்திரைகள் போதுமான அளவு உள்ளது. பன்றி காய்ச்சலால் இறந்த ஓய்வு பெற்ற பேராசிரியை வசிக்கும் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நோய் தடுப்பு மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. இருமல், காய்ச்சல், தொண்டை வலி போன்ற பாதிப்பு இருந்தால் அவர்கள் உடனே ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

    தற்போது விடுமுறை முடிந்து இன்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. இதனால் யாராவது மாணவ, மாணவிகள் காய்ச்சல் காரணமாக விடுமுறை எடுத்து உள்ளார்களா? என்பதை பற்றி தகவல் தெரிவிக்க தலைமை ஆசிரியர், கல்வி அதிகாரிகளை கேட்டுக்கொண்டு உள்ளோம்.

    காய்ச்சல் பாதிப்பு இருந்தால் சம்மந்தப்பட்ட மாணவரின் வீட்டிற்கு சுகாதார ஊழியர்கள் நேரில் சென்று அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி ஆய்வு செய்வார்கள். மேலும் பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்களில் இது தொடர்பான விழிப்புணர்வு நோட்டீசுகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Swineflu

    ×